ASURAN!!! A must watch. adimaithanathin vali puriyum. Heavyly Raw but the truth is raw too.
அசுரன் படம் எனக்கு பிடித்திருக்கிறது. அது அறம் பாடவில்லை. ஒடுக்கப்பட்டவனின் எதிர் குரலாக ஒலிக்கிறது. இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்ததே சிவசாமியின் குடும்பம் தான். அதில் இருந்த ஆண் பெண் பிள்ளை எவருக்கும் நான்கு வகையான அச்சங்கள் அறம், பொருள், இன்பம், உயிர் என்பதில் ஒரு அச்சம் கூட இல்லை. நான் என் வழியில் செல்கிறேன். எவரையும் அச்சமடைய செய்யவில்லை. எவருக்கும் அச்சம் கொண்டும் வாழமாட்டேன் என்பது தான் கதைப்பொருள்நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பாஜக ஆட்சி பற்றி பேச்சு வரும்போது அவர் சொன்னது சமூகநீதிக்கும், சனாதனத்திற்கும் இடையே இறுதிப்போர் நடக்கிறது. சனாதனம் சமூகநீதியை கண்டு பெரும் அச்சம் கொண்டு இருப்பதால் தான் இத்தனை தவறுகளை இப்போது மிக வெளிப்படையாக செய்கிறார்கள் என்றார். அதனால் தான் சமூகநீதியும் வீரியமுடன் போராடுகிறது என்றேன்.மேற்குலகிலும் இத்தகைய கொடூரங்கள் நிகழ்ந்தன. அதன் எதிர் விளைவுகளாலும், அறிவியல் பார்வையாலும், பொருளாதார வளர்ச்சிக்கு தேவை சமூக நல்லிணக்கம் என்று உணர்ந்ததாலும் சமூகநீதியின் பக்கம் விரைவாக அவர்கள் சாய்ந்தார்கள். அதன் நல்ல விளைவை இன்று உணர்கிறார்கள். படத்தில் வேல்ராஜ் மற்றும் பசுபதி கதாபாத்திரங்கள் இதை உணர்த்துகிறார்கள்.படத்தில் பிரகாஷ்ராஜ் தான் கம்யுனிஸ்ட். களத்தில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவர்களை போராட அழைப்பதும், அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் காவல்துறை, நீதிமன்றம், ஊர் பஞ்சாயத்து என்று எல்லா இடத்திலும் நிற்கிறார்.பஞ்சமி நிலங்கள் குறித்து பேசிய முதல் படமாக இதை பார்க்கிறேன். ஒரு இடத்தில் " அரசியல் அதிகாரம் எங்க கிட்ட தான் தெரியுமில்ல" என்று சாதி இந்துக்கள் ஆர்பரிக்கும்போது " அந்த அதிகாரத்தில் ஒரு சில நல்ல அதிகாரி இருப்பான், அவன் கேள்வி கேட்பான் அவனுக்கு நீ பதில் சொல்லிதான் ஆகணும் தெரியுமில்ல" என்று பிரகாஷ்ராஜ் பதிலடி கொடுப்பார். உண்மை தான் அந்த ஒருசில நல்ல அதிகாரிகள் இருப்பதால் தான் இன்று ஒட்டுமொத்த தேசமும் ஓரளவிற்காகவது ஒழுங்காக நடக்கிறது. குஜராத் கலவரத்தில் ஆளும்கட்சியின் வன்முறையை உலகிற்கு சொன்ன தால் இன்று பதவி பறிபோய், சிறையில் வாடும் சஞ்சீவ் பட், தன் சொந்த காசை செலவழித்து குழந்தைகளை காப்பாற்றி அதனால் கைது செய்யப்பட்ட டாக்டர் கபில்கான் என்று பலரும் கண்முன் வந்தார்கள்.சிவசாமியின் கோபம் நியாயமானது என்று மட்டும் சொல்லவில்லை அது தேவையானது என்று பல இடங்களில் உணர்த்திக்கொண்டே இருப்பது தான் சிறப்பு. அதை தாமதப்படுத்தும் போது பார்வையாளர்கள் கடுப்பாவது அவர்கள் மனதில் அவர்களை அறியாமல் சமூகநீதியை கொண்டு சேர்த்துவிட்டதாக பார்க்கிறேன்.ஒடுக்கும் சாதி, ஒதுக்கப்பட்ட சாதி என்பதை தாண்டி இன்ன சாதி என்று குறிப்பிடும் எந்த ஒரு அடையாளமும் இல்லை என்பதை சிறப்பாக பார்க்கிறேன். பிறப்பால் ஒருவரை ஒடுக்கும் எவரும் அது தவறு என்று குற்ற உணர்ச்சி கொள்ளவேண்டும். ஒடுக்கப்படும் எவரும் கோபம் கொள்ளவும் வேண்டும். இதில் எங்கேயும் தமிழன் என்று இனபெருமைப்பட எதுவுமில்லை.இறுதிக்காட்சியில் சிவசாமியின் பண்பட்ட பேச்சு அற்புதம். அதுதான் ஒடுக்கப்பட்ட மனிதனின் மனவலியும், பாதையும், எதிர்பார்ப்பும்."ஒரே ஊர்ல இருந்துகிட்டு, ஒரே மொழிய பேசிகிட்டு இருப்பது போதாதா மனுஷன் ஒண்ணாமண்ணா வாழ"அசுரன் வினைக்கு எதிர்வினையாக கோபம் கொண்டு வாளை தூக்குகிறான். ஆனால் படையெடுக்கவில்லை. அது அவன் எண்ணமும் அல்ல. என்னை அசுரனாக்கி பார்க்காதே என்று தான் சொல்கிறான்ஒட்டுமொத்த படக்குழுவிற்கும், இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும், நாயகன் தனுஷ்சிற்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்